டிரெண்டிங்

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் வெற்றி பெறுவோம்: முதலமைச்சர் உறுதி

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் வெற்றி பெறுவோம்: முதலமைச்சர் உறுதி

Rasus

திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் அதிக வாக்குகளுடன் அரசு வெற்றிபெறும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு பதவியேற்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் பழனிசாமி இன்று டெல்லி சென்றிருந்தார். இதன் பின் பிரதமர் மோடியையும் முதலமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, “தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரிடம் மீண்டும் வைத்துள்ளோம்” என்றார்.

டிடிவி தினகரன் முதலமைச்சர் உள்பட அனைவரும் ஃபோர்ட்வெண்டி எனக் கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த பழனிசாமி, ஃபோர்ட்வெண்டி என்பது தினகரனுக்குதான் பொருந்தும் என்றார். ஏனென்றால் மூன்று மாத நிகழ்வுகளை பார்த்து இருப்பீர்கள். ஃபோர்ட்வெண்டி என்பதற்கு டிடிவி தினகரன்தான் பொருத்தமானவராக இருப்பார் எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், “அதிமுக அணிகள் இணைப்பு குறித்து எங்கள் தரப்பிலும் சரி.. அவர்கள் தரப்பிலும் சரி இன்னும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இருப்பினும் அணிகள் இணையும் என நம்புகிறேன். ஜெயலலிதா இருக்கும்போதே நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது நிலுவையில் இருப்பதால் அதுதொடர்பாக மீண்டும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்” என்று கூறினார்.

மேலும், “திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே எங்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தார். அதில் நாங்கள் வெற்றி பெற்றோம். பின்னர் சட்டப்பேரவைத் தலைவர் மீதும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தார். அதிலும் கூடுதலாக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றோம். இப்போதும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதிக வாக்குகளுடன் வெற்றி பெறுவோம்” எனத் தெரிவித்தார்.