முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை அடுத்த வாரம் வீட்டிற்கு அனுப்பிவிடுவோம் என அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், " மிரட்டல், உருட்டல் என எல்லாவற்றையும் பழனிசாமி செய்து பார்க்கிறார். சட்டமன்றத்தில் அன்று யார் இவரை எதிர்த்தாரோ அவருடன் இப்போது கூட்டணி வைத்துள்ளார். இதுதான் கலியுகம். என்றைக்கும் அதர்மம், துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை. இன்னும் ஒரு வாரத்தில் இந்த துரோகத்திற்கு எல்லாம், சட்டமன்றத்தில் நாங்கள் முடிவு விழா நடத்தி விடுவோம்" என்றார்.
இதனிடையே இதுகுறித்து பேசிய கைத்தறித்துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன், " 19 எம்எல்ஏக்கள் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை மாற்றினால் ஏற்றுக்கொள்வோம் என கருத்து சொல்கிறார்கள். அதனை பொதுக்குழு, அல்லது கட்சி அலுவலகத்தில் வந்து தானே சொல்ல வேண்டும். எங்கயோ அவர்கள் இருப்பார்கள். அவர்களுக்காக ஒருவர் வக்காலத்து வாங்குகிறார் என்றால் அதற்கு பெயர் என்ன..?" என கேள்வி எழுப்பினார்.