டிரெண்டிங்

ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப தயாராகிவிட்டோம்: தினகரன் அதிரடி பேட்டி

ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப தயாராகிவிட்டோம்: தினகரன் அதிரடி பேட்டி

rajakannan

முதல்வரை மாற்ற முயற்சிக்கிறோம், இல்லையென்றால் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப தயாராகிவிட்டோம் என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு நல்ல முதலமைச்சரை ஆட்சியில் அமர வைப்போம். பதவி இல்லை என்றால் பன்னீர்செல்வத்துக்கு தூக்கம் வராது. தமிழகத்தில் துரோக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி நீடிப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல. ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று மக்களே விரும்புகின்றனர். தமிழகத்தின் நலன் கருதி இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப தயாராகிவிட்டோம்.

அதிமுகவை நிச்சயம் நாங்கள் மீட்டெடுப்போம். துரோகம் ,சுயநலம் சிந்தனை உடையவர்கள் எப்படி மக்களுக்கு நல்லது செய்வார்கள்” என்றார்.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியை கலைக்கும் எண்ணமில்லை என்று தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இதுவரை தெரிவித்து வந்தனர். ஆளுநரை சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் முதலமைச்சர் மீதுதான் நம்பிக்கை இல்லையென்று தெரிவித்து இருந்தனர். இதனால் ஆட்சிக்கு எவ்வித ஆபத்தும் இல்லையென்று பேசப்பட்டது. இத்தகைய நிலையில் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப தயாராகிவிட்டோம் என்ற தினகரனின் கருத்து தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.