காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர், கட்சியை திறம்பட வழிநடத்த முழுநேரமும் பணியாற்றக் கூடிய புதிய தலைவரை அடையாளம் காண வேண்டுமென தெரிவித்துள்ளார்.
“காங்கிரஸின் தற்காலிக தலைவராக பணியாற்றி வரும் சோனியா காந்தி கட்சியை தொடர்ந்து வழி நடத்துவார் என எதிர்பார்ப்பது நியாயமற்றது. அவரது பணி சுமையை குறைப்பது நம் பொறுப்பு.
அதே நேரத்தில் கட்சியை திறம்பட வழிநடத்தி செல்ல வேண்டிய தலைவரை தேர்வு செய்வதில் குழப்பங்கள் ஏதும் இல்லாமல் தெளிவாக இருக்க வேண்டும் என் நான் நம்புகிறேன்.
ராகுல் காந்தி கட்சியை மீண்டும் வழிநடத்துவதற்கான திறன் இருப்பதாகவே நான் நம்புகிறேன். அவர் அதை செய்ய விரும்பாத பட்சத்தில் புதிய தலைவர் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கையை கட்சி எடுக்க வேண்டும். அது தான் கட்சியின் எதிர்காலத்திற்கு வலு சேர்க்கும்” என செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் சசி தரூர்.
நாளையோடு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைய உள்ள நிலையில் சசி தரூர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.