டிரெண்டிங்

கோவா பிரியர்கள் கவனத்திற்கு.. இஞ்சி டீ, லெமன் டீ ஓகே.. 'old munk' டீ தெரியுமா?

JananiGovindhan

உணவு பிரியர்களை கவருவதற்காகவே பல்வேறு விதமான சவால்களை வைப்பதை உணவகங்கள் அண்மைக் காலமாக பின்பற்றி வருகின்றன.
அதேவேளையில் விநோதமான வித்தியாசமான உணவுகள், பானங்கள் விற்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் குலாப் ஜாமுன் சமோசா, மேங்கோ மேகி, ஃபயர் பானி பூரி என்பன போன்ற எக்கச்சக்கமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வட்டமடித்து வருகின்றன.

காஃபி, ஜூஸ் வரை வந்த இந்த விநோத உணவுகள் தற்போது அனைவராலும் விரும்பக் கூடிய பானமாக இருக்கும் டீ-க்கும் வந்திருக்கிறது. அதன்படி, பிரபலமான மதுபான வகைகளில் ஒன்றான old munk ரம்மில் தேநீரை கலந்து விற்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

கோவாவின் கேண்டொலிம் பகுதியில் உள்ள சின்குரிம் கடற்கரை அருகே இருக்கும் டீக்கடையில்தான் இந்த ரம் டீ செய்யப்படுகிறது என வைரலாகியிருக்கும் வீடியோ மூலம் அறிய முடிகிறது.

அதன்படி, சுட சுட இருக்கும் குட்டி மண் குவளையில் ரம்மையும், டீயையும் ஊற்றி கலந்து அதனை கொதிக்கச் செய்து பொங்கிய பிறகு வாடிக்கையாளருக்கு கொடுப்பது அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது.

இஞ்சி டீ, மசாலா டீ, க்ரீன் டீ, லெமன் டீ என பல வகையான டீக்கள் இருந்த போதிலும் புதிதாக ரம் கலந்த டீ விற்பதை கண்டதும் நெட்டிசன்கள் பலரும் பூரித்துப்போய் அந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.

மது பானத்துக்கு தடையில்லாத பகுதிகளில் ஒன்றான கோவா நகருக்குள் மதுபான பிரியர்களுக்கு ஏற்றார் போல டீயில் ரம் கலந்து விற்கப்படுவது சிலருக்கு பிடித்ததாக இருந்தாலும் டீ பிரியர்கள் பலருக்கும் அருவருப்பையே கொடுப்பதாக பதிவிட்டு வருகிறார்கள்.  

முன்னதாக ரம் டீயை போலவே குலாப் ஜாமுனை ஊர வைக்க இருக்கும் சர்க்கரை பாகுக்கு பதில் ஓல்ட் மங்க் ரம்மில் வைத்து ஊர வைத்த ஜாமுன் குறித்த வீடியோக்களையும் இணையவாசிகள் பகிர்ந்து வருகிறார்கள்.