டிரெண்டிங்

''முதலமைச்சர் யோகி திட்டிவிட்டார்'' - மோடியிடம் பாஜக தலித் எம்பி புகார்

''முதலமைச்சர் யோகி திட்டிவிட்டார்'' - மோடியிடம் பாஜக தலித் எம்பி புகார்

rajakannan

உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் தன்னை திட்டி விரட்டி விட்டதாக பாஜக எம்பி ஒருவர் பிரதமர் மோடியிடம் புகார் அளித்துள்ளார். 

உத்தரப்பிரதேசத்தின் ராபர்ட்ஸ்கஞ்ச் தொகுதியை சேர்ந்த தலித் எம்பி சோட்டேலால் என்பவர் இப்புகாரை அளித்துள்ளார். தன்னுடைய தொகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து தான் இழிவாக நடத்தப்படுவது குறித்தும் முறையிட முதல்வர் ஆதித்யநாத்தை அணுகியதாகவும் ஆனால் அவர் அடித்து விரட்டிவிட்டதாகவும் பிரதமருக்கு சோட்டேலால் கடிதம் எழுதியுள்ளார். 

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “நான் போஜ்பூரில் வனப்பகுதியில் நடைபெறும் ஊழல்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்பேன் ஆனால், அவர்கள் எனக்கு சரியாக பதில் அளிப்பதில்லை. எனக்கு துப்பாக்கியை வைத்து சிலர் கொலை மிரட்டல் விடுக்கிறார். சாதிய ரீதியாக திட்டுகிறார். போலீசில் இதுகுறித்து புகார் செய்தால் வழக்குப் பதிவு செய்ய மறுக்கிறார்கள். 

உத்தரபிரதேச மாநில பாஜக தலைவர் மகேந்திர நாத் பாண்டேவை மூன்று சந்தித்து தனது மரியாதையை காக்குமாறு கேட்டுக் கொண்டேன். அதேபோல் பாஜக பொதுச் செயலாளர் சுனில் பன்சால் மற்றும் சில முக்கிய தலைவர்களையும் சந்தித்தேன். ஆனால் யாரும் உதவி செய்யவில்லை. அதனால், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை இரண்டு முறை சந்தித்தேன். அவர் என்னை திட்டி வெளியேற்றிவிட்டார். 

எனக்கு யாரும் உதவி செய்யாததால் தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையத்திற்கு கடிதம் எழுதினேன். அதேபோல் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை பாதுகாக்குமாறு உங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்” தெரிவித்துள்ளார். நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 

எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு நீர்த்துப் போகச் செய்கிறது என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் 9 தலித்கள் கொல்லப்பட்டனர். இத்தகைய நேரத்தில் தலித் எம்.பி எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.