விசாகப்பட்டினம் விசாகா பள்ளத்தாக்கு பள்ளி அருகே உள்ள பெண்கள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் உள்ள சில பெண் குழந்தைகள் வளாகச் சுவரில் ஏறி தங்களை மனநலம் குன்றியவர்களாக மாற்றி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் கொடுத்து சித்ரவதை செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
விசாகப்பட்டினத்தில் விசாகா பள்ளத்தாக்கின் அருகே உள்ள பெண்கள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் உள்ள பெண் குழந்தைகள் கடந்த புதனன்று திடீரென வளாகச் சுவரில் ஏறி, ஊழியர்கள் அதிகப்படியான தூக்க மாத்திரைகளைக்கொடுத்து தங்களை சித்திரவதை செய்வதாகவும், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சுவற்றிலிருந்து குதித்து நாங்கள் தற்கொலை செய்துக்கொள்வோம் என்று கூறி போராட்டம் நடத்தினர்.
இவர்களின் போராட்டம் இவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவரவே, தங்களின் குழந்தைகளுக்கு ஆதரவாக பெற்றோர்களும், பெண் குழந்தைகளும் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ஆலோசனை மற்றும் உடனடி ஆதரவு தேவை என்றும், ஊழியர்கள் மீது உடனடி விசாரணை தேவை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குரல் எழுப்பினர்,
இவர்களின் போராட்டத்தை அடுத்து சம்பவம் குறித்து அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது.
இது குறித்து, சிறுவர் சீர்திருத்தப்பள்ளி பொறுப்பாளர் சுனிதா கூறுகையில், சில பெண்கள் மூன்று நாட்களாக மருந்துகளை உட்கொள்ள மறுத்து அங்கிருக்கும் ஊழியர்களை மிரட்டிவருகின்றனர். இதில் குறிப்பாக ஐந்து பெண்களுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. மனநல மருத்துவமனை அதிகாரிகள் தலையிட்டு, தினம் ஒரு பெண்ணை ஆலோசனைக்கு அழைத்துச்சென்று அவர்களின் உடல்நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.