டிரெண்டிங்

விவேக் ஜெயராமனின் பின்னணி என்ன?

விவேக் ஜெயராமனின் பின்னணி என்ன?

webteam

வருமான வரி சோதனைக்கு உள்ளாகியிருக்கும் விவேக் ஜெயராமன், சசிகலாவின் அண்ணன் ஜெயராமன், இளவரசி தம்பதியின் மகன்.

27 வயதாகும் விவேக் சிசிகலா குடும்பத்தில் செல்வாக்கு மிக்க நபர்களுள் ஒருவர். ஹைதராபாத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான திராட்சை தோட்டத்தை ஜெயராமன் கவனித்து கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.அப்போது விவேக் உள்ளிட்ட மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்த இள‌வரசியை தன்னுடன் வந்து தங்கிக்கொள்ளுமாறு ஜெயலலிதா போயஸ் கார்டனில் சேர்த்துக்கொண்டார்.மன்னார்குடியிலும், கோவை சின்மயா சர்வதேச பள்ளியிலும் விவேக் ஜெயராமன் பள்ளிப்படிப்பை முடித்தார்.ஆஸ்திரேலியாவில் பி.பி.ஏ ஃபைனான்சியல் அக்கவுண்ட்ஸ் மற்றும் புனேவில் எம்.பி.ஏ படிப்பை முடித்தார். கொல்கத்தாவில் உள்ள ஐடிசி நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றினார். தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளிலும் விவேக் விளையாடியுள்ளார். 

இவர் பெங்களூருவில் பணிபுரியும் போது, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலிலதாவுக்கும் சசிகலாவுக்கும் சிறை தண்டனை கிடைத்தது. சிறையில் இருந்த அவர்களுக்கு மருந்து வாங்கி வந்துகொடுக்கும் பணியை விவேக் செய்துவந்தார். தற்போது ஜெயா டிவி மற்றும் ஜாஸ் சினிமாஸின் சி.இ.ஓவாக செயல்பட்டு வருகிறார். நாடு முழுவதும் 350 திரையரங்குகள் அவரது கட்டுப்பாட்டில் உள்ளன. ஜெயலலிதாவின் ரேஷன் கார்டில் இடம்பிடிக்கும் அளவுக்கு விவேக் முக்கியமானவராகத் திகழ்ந்தார். கடந்த ஆண்டு விவேக் ஜெயராமனுக்கு மருத்துவம் படித்து வரும் கீர்த்தனாவுக்கும் திருமணம் நடைபெற்றது. நிர்வாகத்திறமையுடன் செயல்பட்டதாலும் தந்தையை இழந்தவர் என்பதாலும் விவேக், ஜெயலலிதாவிற்கு விருப்பமானவராக இருந்துள்ளார்.