ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் எங்கள் தலையீடு இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் மொத்தமாக 72 மனுக்கள் ஏற்கப்பட்டன. விஷால் வேட்புமனு முதலில் நிராகரிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின் தனது மனு ஏற்கப்பட்டுவிட்டதாக விஷால் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பு தந்துள்ளது என்றும், தேர்தல் களத்தில் சந்திக்கலாம் எனவும் தெரிவித்தார். ஆனால் இறுதியில் விஷால் மனு நிராகரிக்கப்பட்டுவிட்டதாக தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக நள்ளிரவு 11 மணியளவில் அறிவித்தார்.
இந்நிலையில் இன்று மாலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். முறைகேடுகள் சம்பந்தமாக விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த சர்ச்சைக் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். “வேட்புமனு நிராகரிப்பு விவகாரத்தில் நாங்கள் தலையிடவில்லை” என்று கூறிய முதலைமைச்சர், “ வேட்புமனு தாக்கலின் போது தவறுகள் இருந்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். அதிமுக வேட்பாளரை தவிர மற்ற வேட்பாளர்களை எங்களுக்கு தெரியாது. இந்திய துணை கண்டமே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை உற்று நோக்கியுள்ளது. வலுவான இயக்கம் அதிமுக; ஜெயலலிதா இல்லாமல் முதல் தேர்தலை சந்திக்கிறோம்”என்றும் அவர் குறிப்பிட்டு பேசினார்.