அனைவரிடத்திலும் அன்பாக பழகி, நேரம் பார்க்காமல் உழைத்த விருத்தாச்சலம் வட்டாட்சியர் கவியரசு மறைந்த செய்தி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் வட்டாட்சியராக பணியாற்றிவர் கவியரசு. இவர் குறித்து அரசு அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் என யாரிடம் கேட்டாலும், ‘நல்ல மனிதர்’ என்ற பதிலே வருமாம். அந்த அளவிற்கு தனது பணிக்காலத்தில் மக்களுக்காக உழைத்திருக்கிறார் கவியரசு. மக்கள் பணி மட்டுமின்றி வரலாற்றை மீட்டெடுப்பது, இயற்கை வளங்களை பேணிக்காப்பது உள்ளிட்டவற்றையும் இவர் தொடர்ந்து செய்துள்ளார்.
பல வரலாற்று தடயங்களையும், பொருட்களையும் கண்டுபிடித்து, அவற்றை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தி வந்துள்ளார். யாரேனும் பிரச்னை என வந்தால் உடனே நேரில் சென்று அதனை தீர்த்து வைக்கும் மனப்பான்மையை கொண்டிருந்துள்ளார். இரண்டு ஆண்டுகளில் விருத்தாசலம் மக்களின் அன்பிற்குரிய வட்டாட்சியராக மாறிய இவர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கியதும், கொரோனா பாதித்த நபர்களை மீட்டெடுப்பதில் மும்முரம் காட்டியுள்ளார்.
கொரோனா பாதித்த நபர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண்பது, அவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்கச் செய்வது என சேவை செய்துள்ளார். இதற்கிடையே தனது குடும்பத்தை கோவைக்கு அனுப்பிவிட்டு, முழு நேரமும் கொரோனா மீட்புப் பணியில் இறங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 10ஆம் தேதி கவியரசுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த கவியரசு, தன்னுடன் பணியாற்றிய அதிகாரிகள் உட்பட மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்திருந்தார். தனது பணியிலிருந்து கொரோனாவால் தற்காலிகமாக விலகி விடைபெறுவதாகவும், மீண்டும் மீண்டு வந்து அனைவருக்கும் நன்றி சொல்வேன் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று அவர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த செய்தி விருத்தாலசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.