டிரெண்டிங்

ஃபவுன்டெயினை டிஷ் வாஷாக மாற்றிய விருந்தாளிகள்.. வைரல் வீடியோவும் நெட்டிசன்ஸின் பதிலடியும்

JananiGovindhan

வேடிக்கையான வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லாத இடம்தான் சமூக வலைதளம். அதுவும் கல்யாண வீடுகளில் நடக்கும் விநோத காட்சிகள் பகிரப்படாத நாளே இருக்காது. அந்த வகையிலான வீடியோ ஒன்றுதான் தற்போது வைரலாகி வருகிறது.

நகரங்களில் நடைபெறும் திருமணங்களில் பல வகையில் அலங்காரங்கள் செய்யப்படுவது வாடிக்கையாக இருந்தாலும் கிராமப்புறங்களில் சிறிய அளவில் அலங்காரம் செய்யப்பட்டாலும் அது அங்குள்ள மக்களுக்கு பெரிய விஷயமாகவே இருக்கும் அல்லது அலங்காரத்திற்காக வைக்கப்பட்டவற்றை சிலர் கையாளும் விதமே வேடிக்கையாக போய் முடியும்.

அந்த வகையில், வட இந்தியாவின் அடையாளம் தெரியாத கிராமம் ஒன்றில் நடந்த கல்யாணத்தில் ஜகஜோதியாக அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கிறது. அதில் ஒன்றாக நீருற்றும் (Fountain) அமைக்கப்பட்டிருக்கிறது.

அதனைக் கண்ட திருமணத்துக்கு வந்த விருந்தாளிகள் பலரும் கை கழுவும் இடம் என நினைத்துக்கொண்டு சாப்பிட்டுவிட்டு அந்த ஃபவுன்டெயினில் கைகளையும் தட்டுகளையும் கழுவியிருக்கிறார்கள். இந்த நிகழ்வுதான் வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருக்கிறது.

அதில், “கிராமங்களில் நடக்கும் திருமணங்களில் அதிகளவில் அலங்கார வேலைகள் எதுவும் செய்யக்கூடாது. இல்லாவிடில் இப்படிதான் ஃபவுன்டெயின் மூட வேண்டியிருக்கும்” என ட்விட்டர் பயனர் குறிப்பிட்டிருக்கிறார்.

4.25 லட்சத்துக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டிருக்கும் இந்த வீடியோவுக்கு பலரும் கலவையான விமனர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள். அதன்படி, “நல்லவேளை அந்த நீருற்றில் துணி துவைக்காமல் இருந்தார்களே” என்றும் “செயற்கை நீருற்று பற்றி தெரிந்திருக்காவிட்டாலும் சாப்பாட்டை வீணாக்காமல், தட்டுகளை சுத்தமாக கழுவி வைப்பது உங்களுக்கு தெரியவில்லையா” என்றும் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.