டிரெண்டிங்

“This is Brilliant.. But I like this” மம்பட்டியான் பாட்டுக்கு ஆட்டம் போட்டாரா விராட் கோலி?

JananiGovindhan

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் பலரது கவனத்தையும் பெற்றவராவார். அந்தவகையில் கிரிக்கெட்டில் சாதனை படைப்பதை போல சமூக வலைதளங்களிலும் கோடிக்கணக்கான ஃபாலோயர்ஸ்களை கொண்டவர் என்ற பெருமை விராட்டுக்கு எப்போதும் உண்டு.

குறிப்பாக விளையாட்டு துறையில் உலகளவில் கால்பந்து வீரர்களான ரொனால்டோ, மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலியே பிரபலமான நபராக இணையத்தில் அங்கம் வகிக்கிறார். அதன்படி 240 மில்லியன், அதாவது 24 கோடி பேரால் ஃபாலோ செய்யப்படும் விளையாட்டு வீரராக இருக்கிறார் விராட்.

விராட் தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடனான ஃபோட்டோவோ அல்லது விளையாட்டு தொடர்பான பதிவுகளையோ பகிர்ந்தால், ரசிகர்களின் லைக்ஸ் மழையால் குறைந்தபட்சம் அடுத்த ஒரு வாரத்துக்காவது நனைந்துவிடுவார்! அந்த அளவுக்கு சமூக வலைதளங்களில் விராட் படு ஆக்டிவாக இருக்கக் கூடியவர். அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் போட்டி முடிந்ததும் மும்பைக்கு திரும்பிய விராட், பிரபல நார்வேயின் நடனக்குழுவான குயிக் ஸ்டைல் டான்சர்களை சந்தித்திருக்கிறார்.

அப்போது அவர்களுடன் சேர்ந்து விராட்டும் க்யூட் ஆட்டத்தை போட்ட வீடியோதான் தற்போது ரீமேக் செய்து ரீல்ஸாக உலவும் அளவுக்கு வைரலாகியிருக்கிறது. அந்த வீடியோவில் டான்ஸ் குழுவைச் சேர்ந்த ஒருவர், கிரிக்கெட் மட்டையை வைத்து என்ன செய்வதென தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது, எப்படி பேட்டை பிடிக்க வேண்டும் என அவருக்கு சொல்லித் தருவது போல விராட் வந்ததும் மற்ற டான்ஸ் குழுவினர் கூட, அனைவரும் சேர்ந்து ஜாலியாக டான்ஸ் மூவ்மென்ட் செய்வதாக இடம்பெற்றிருக்கிறது. இது அந்த குயிக் ஸ்டைல் குழுவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிரப்பட்டிருக்கிறது.

இந்த வீடியோவை மல்லிப்பூ வெச்சி வெச்சி வாடுதே மற்றும் மலையூர் மம்பட்டியான் ஆகிய பாடல்களின் வெர்ஷனில் ரீமிக்ஸ் செய்து இணையவாசிகள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.