டிரெண்டிங்

2200 கிமீ சைக்கிளிலேயே யாத்திரை செல்லும் 68 வயது பெண்மணி - வைரல் வீடியோ

Sinekadhara

பாத யாத்திரை செல்பவர்கள் செருப்பு அணியாமல்கூட பல கிலோமீட்டர் தூரம் பல நாட்கள் நடந்து செல்வார்கள். பயணத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் கொண்டுசெல்லும் அவர்கள் தங்கள் உடல்நலத்தைக் குறித்து கவலைப்பட மாட்டார்கள்.

ஆனால் வயதானவர்கள் யாத்திரை செல்லும்போது தங்கள் உடல்நலத்தைக் காக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது வழக்கம். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இந்த 68 வயது பெண்மணிக்கு அதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்ற கவலை இல்லாமல் ஒரு பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா?

ரத்தன் ஷர்தா என்ற டிவிட்டர் பயனர் ஒருவர் இந்த பெண்மணியின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் இந்த பெண் புல்தானா மாவட்டத்திலிருந்து வைஷ்னோ தேவி வரை சுமார் 2200 கிமீ தூரம் கியர் சைக்கிளிலேயே செல்வதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ 1.59 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

இந்த பெண்மணியின் தைரியத்தை பலரும் பாராட்டிவரும் நிலையில், அவரது உறவினர்களும், குடும்பத்தினரும் யாத்திரைசெல்ல மாற்று ஏற்பாடு செய்துகொடுத்தால் நன்றாயிருக்கும் எனவும் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.