செல்லப்பிராணிகளை ஆபத்திலிருந்தும், பேரழிவிலிருந்தும் காப்பாற்ற அதன் உரிமையாளர்களும், நலன் விரும்பிகளும் எடுக்கும் முயற்சிகள் எப்போதுமே ஆச்சர்யப்படுத்திவிடும். அப்படியான வீடியோ ஒன்றுதான் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
சுமார் ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் மேலானோர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். அதில், ராட்சத மலைப்பாம்பு ஒன்று செல்லப்பிராணியான நாயை தன்னுடைய உடலால் கட்டி இறுக்கி அதனை உட்கொள்ள முயல்கிறது. அதனைக் கண்ட சிறுவர்கள் சிலர் நாயை காப்பாற்றுவதற்காக சிறிதும் அச்சமின்றி மலைப்பாம்பை கம்பாலும், கையாலும் பிடித்து இழுக்கிறார்கள்.
ஆனால் மலைப்பாம்போ நாயை மேலும் மேலும் இறுக்கி பிடிக்க, சிறுவர்களும் நாயை காப்பாற்றும் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து மலைப்பாம்பின் பிடியை விடுவிக்கின்றனர். ஒரு வழியாக நாயை மலைப்பாம்பின் பிடியில் இருந்து விடுவித்ததும், அந்த நாய் குடுகுடுவென எழுந்து ஓடி விடுகிறது. இந்த வீடியோவை கண்ட பலரும் சிறுவர்களின் தைரியத்தையும், மனித நேயத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.