ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவு டெலிவரி ஆவது, ஆர்டர் மாறிப்போவது போன்ற பல குளறுபடிகள் நிறைந்த அனுபவங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக அறிந்திருப்போம். சமயங்களில் விநோதமான நிகழ்வுகளும் அரங்கேறியிருக்கும்.
அந்த வகையில் தான் ஆர்டர் செய்த சிக்கன் விங்ஸ்க்கு பதில் வெறும் எலும்பு துண்டுகள் கொண்ட காலி டப்பாவும், வருத்தமான குறிப்போடு டெலிவரி செய்யப்பட்டதை கண்டு வாடிக்கையாளர் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
டேமியன் சாண்டெர்ஸ் என்ற நபர் இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிட்டிருக்கிறார். அதில், டேமியன் சிக்கன் விங்ஸ், ஃப்ரஞ்ச் ஃப்ரைஸ் மற்றும் ஒரு ட்ரிங்க் டோர் டாஷ் டெலிவரி ஆப் மூலம் ஆர்டர் செய்திருக்கிறார்.
டெலிவரி பார்சல் வந்ததும் பெரிதும் ஆர்வமாக போய் வாங்கி வந்தவருக்கு பேரதிர்ச்சியே காத்திருந்திருக்கிறது. பார்சலை திறந்து பார்த்த போது சிக்கன் விங்ஸ்க்கு பதில் அதன் எலும்பும், ஃப்ரஞ்ச் ஃப்ரைஸ் டப்பா காலியாகவும், பாதி குடிக்கப்பட்ட ட்ரிங்க் மட்டுமே இருந்திருக்கிறது.
அதோடு கூட, டெலிவரி ஊழியர் வைத்திருந்த ஒரு வருத்தமான குறிப்பும் இருந்திருக்கிறது. அதில், “உங்கள் உணவை சாப்பிட்டுவிட்டேன் என்னை மன்னித்து விடுங்கள். நான் மிகவும் உடைந்துப்போயிருந்தேன். அதோடு பசியாகவும் இருந்தேன். யாருக்கோ உணவளித்ததை போல எண்ணிக்கொள்ளுங்கள். இந்த வேலையை விடப் போகிறேன். நன்றாக இருங்கள். இப்படிக்கு உங்கள் டோர் டாஷ் நபர்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்/.
இதனைக் கண்ட டேமியன், “இப்போது நான் என்ன செய்வது?” என இன்ஸ்டாவில் கேப்ஷன் இட்டிருக்கிறார். அதற்கு நெட்டிசன்கள் பலரும் பெரிய மனது வைத்து அந்த நபரை மன்னித்து விடுங்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.