டிரெண்டிங்

போலீசுக்கு எதிராக நாட்டு வெடிகுண்டு வீசிய பொதுமக்கள் - மேற்கு வங்க வன்முறை

webteam

மேற்கு வங்கத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரின் கார் ஒன்று தாக்கப்பட்டது.  

மேற்குவங்க மாநிலத்திலுள்ள டார்ஜிலிங், ஜல்பாய்குரி மற்றும் ராய்கன்ஞ் ஆகிய பகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அங்குள்ள சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது எனப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் சில வாக்குச்சாவடியில் வாக்காளர்களின் பெயர் இல்லை எனப் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின.  

இந்நிலையில் மேற் வங்கத்தின் சோப்ரா பகுதியிலுள்ள வாக்குச்சாவடியில் கலவரம் நடைபெற்றுள்ளது. அந்த வாக்குச் சாவடியில் பொதுமக்கள் தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை எனத் தகராறு செய்துள்ளனர். பின்னர் அவர்கள் தேசிய நெடுஞ்சாலை 31ஐ முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இவர்களை விரட்டியடிக்க முற்பட்டனர். 

அப்போது அவர்கள் மீது டியர்கேஸ் பயன்படுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டததாக தெரிகிறது. இதனால் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தை களைத்தனர். அத்துடன் அப்பகுதிக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் முகமது சலீமின் வாகனமும் தாக்குதலுக்கு உள்ளானது. இதனையடுத்து அப்பகுதியில் அதிவிரைவுப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.