டிரெண்டிங்

தலித்களின் போராட்டத்தால் ஸ்தம்பித்தது மும்பை: வன்முறையில் ஒருவர் பலி

தலித்களின் போராட்டத்தால் ஸ்தம்பித்தது மும்பை: வன்முறையில் ஒருவர் பலி

rajakannan

மகாராஷ்டிரா மாநிலத்தில் பீமா கோரேகான் யுத்த வெற்றியைக் கொண்டாடிய தலித்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து வன்முறை வெடித்துள்ளது.

1818-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி மகாராஷ்டிராவை ஆண்ட பேஷ்வா பிராமண அரசருக்கு எதிராக ஆங்கிலேயர்கள் போரிட்டு வெற்றி பெற்றனர். புனேவுக்கு அருகில் உள்ள சிருர் கிராமத்தில் நடைபெற்ற இந்தப் போரில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக தலித்களான மகர் சமூகத்தினர் கலந்து கொண்டு சண்டையிட்டனர். இந்த யுத்தத்தில் 25,000 பேஷ்வா பிராமணர் படை கொல்லப்பட்டனர். 500 மகர் படையினர் கொல்லப்பட்டனர். வெற்றி பெற்றதன் நினைவாக வைக்கப்பட்ட நினைவுத் தூணில் 49 வீரர்களின் பெயரில் 22 பேர் மகர் சமூகத்தினர்.

அம்பேத்கர் போர் நடந்த பகுதியில் 1927-ம் ஆண்டு பார்வையிட்டு பேசுகையில் பீமா கோரேகான் போர் ஜாதிக்கு எதிரான போர் என்று கூறினார். அதன் பிறகு ஆண்டுதோறும் தலித் மக்கள் நினைவுத் தூண் அருகில் ஜனவரி ஒன்றாம் தேதி ஒன்று கூடி போரின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஆண்டு தொடக்கம் முதலே பீமா கோரேகான் யுத்த வெற்றியைக் கொண்டாட எதிர்ப்புகள் நிலவி வந்தது. ஆங்கிலேயர்கள் போரில் வெற்றி பெற்றதை கொண்டாடுவது தேச விரோதம் என்று எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல், ஜனவரி ஒன்றாம் தேதி புனே நோக்கி சென்று கொண்டிருந்த தலித்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, இந்தியக் குடியரசு கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலித்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டங்கள் பல்வேறு இடங்களில் வன்முறையில் முடிந்தது. 

மும்பை மற்றும் புனேயின் பல்வேறு இடங்களில் தலித்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். கடைகளை மூடுமாறும் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. சில இடங்களில் ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். வன்முறை சம்பவத்தில் 40 வயதுமிக்க ஒருவர் உயிரிழந்தார். சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு இடங்களிலும் வன்முறை பரவியது. தலித்களின் போராட்டத்தால் மும்பை மற்றும் புனே நகரங்கள் ஸ்தம்பித்தது.

அமைதி காக்குமாறு முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று கூறிய அவர் இந்த மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலித் தலைவர்கள் நாளை மாநிலம் தழுவிய பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கரும் அழைப்பு விடுத்துள்ளார்.