டிரெண்டிங்

“எனக்கு எங்க அப்பா கிங் ஆக இருக்க தான் ஆசை” - விஜய பிரபாகரன்

webteam

‘எனக்கு எப்போதும் எங்க அப்பாதான் கிங்; எனக்கு எங்க அப்பா கிங் ஆக இருக்க தான் ஆசை’ என விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தேமுதிக 16-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேமுதிக கொடியை விஜயகாந்த் ஏற்றினர். இதைத்தொடர்ந்து நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசுகையில், “மொழியை மொழியாக பார்க்க வேண்டும். தமிழை பிரச்சாரம் செய்பவர்கள் அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

எனக்கு எப்பொழுதும் எங்க அப்பாதான் கிங். எனக்கு எங்க அப்பா கிங் ஆக இருக்க தான் ஆசை. செயற்குழு பொதுக்குழு கூட்டி தான் தேமுதிக கூட்டணியை முடிவு செய்யும். தேமுதிகவின் மேல் உள்ள நம்பிக்கையில் இளைஞர்கள் இந்த கட்சியில் சேர்ந்துள்ளனர்.

என்னை விஜயகாந்த் மகனாக பார்க்காதீர்கள். உங்கள் நண்பனாக பாருங்கள். 40 வருடங்கள் கேப்டன் மக்களுக்காக உழைத்து வருகிறார். இந்தி மொழி எதிர்ப்பு என பலர் தப்பான பிரச்சாரம் செய்கின்றனர். கேப்டன் வழியில் அன்னை மொழி காப்போம். அனைத்து மொழியும் கற்போம். பல மொழிகள் கற்றால் தான் நம் குடும்பத்தை காப்பாற்ற முடியும்” எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் பேசுகையில், “15 வருடங்களில் நாங்கள் பார்க்காத வெற்றியும் கிடையாது; தோல்வியும் கிடையாது.
எனக்கு 50 வயது ஆனபோது எனக்கு இளைஞரணி செயலாளர் பதவி வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். கொரோனா காலத்தில் உழைத்த மருத்துவர்கள் துப்புரவு பணியாளர்களுக்கு என்னுடைய வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

செப்டம்பர் 1ம் தேதி தேமுதிக பொதுச்செயலாளர் குறித்து ஒரு நாளிதழ் கார்டூன் வெளியிட்டது. நான் அடுத்த நாள் அதற்கு எதிராக ஒரு கார்டூனை வெளியிட்டேன். 2016 ஆண்டு விஜயகாந்த் காலில் பல கட்சியினர் விழுந்த போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. நான் எந்த கட்சி தலைவர்களையும் தொண்டர்களையும் அசிங்கப்படுத்துவது போல் போடவில்லை. எந்த கட்சி தலைவர்களின் கார்ட்டூனையும் போட்டு விமர்சனம் செய்யாதீர்கள் என பத்திரிகைகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். சென்ற முறை 29 சட்டமன்ற உறுப்பினர்கள் தேமுதிக சார்பில் சென்றார்கள். அதைவிட கூடுதலாக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு செல்வார்கள்" எனத் தெரிவித்தார்.