தமிழகத்தில் நிலவும் டெங்கு, சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்டவை குறித்து ஆளுநரிடம் புகார் தெரிவித்ததாகவும், அதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாகவும் விஜயகாந்த் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சந்தித்து பேசினார். பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், " சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளேன். மேலும் தமிழகத்தில் நிலவும் டெங்கு, சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்டவை குறித்தும் ஆளுநரிடம் புகார் தெரிவித்தேன். அதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கொடுத்தார். எம்ஜிஆர் எனக்கு பிடித்த தலைவர் தான். ஆனால் தேமுதிக சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படாது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதும் தவறு. அழைப்பு விடுக்கப்படாததால் சிவாஜி கணேசன் மணிமண்டப விழாவில் பங்கேற்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது. தேர்தலில் யாருடனும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை" என்றார்.