டிரெண்டிங்

செவிலியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் நிதி திரட்டுகிறார் விஜயபாஸ்கர்: ஸ்டாலின் தாக்கு!

செவிலியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் நிதி திரட்டுகிறார் விஜயபாஸ்கர்: ஸ்டாலின் தாக்கு!

webteam

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல் சு‌‌காதாரத்துறை அமைச்சர் தேர்தல் நிதி திரட்டுவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 2வது நாளாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியரை அழைத்து அரசு தலைமைச் செயலாளர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியருக்கு 34 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என 2016 ஆம் ஆண்டே உச்சநீதிமன்றம் உத்தரவிட்‌ட பிறகும், 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளாக பணிநிரந்தரம் செய்யப்படாமல், வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் செவிலியர்களின் குறைகளை கேட்கக்கூட நேரமின்றி சுகாதாரத்துறை அமைச்சர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு மீண்டும் தேர்தல் நிதி திரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுவதை விடுத்து, உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.