டிரெண்டிங்

“நல்லது நடக்கும்னு நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” - விஜய் சேதுபதி

“நல்லது நடக்கும்னு நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” - விஜய் சேதுபதி

webteam

அனைவரையும் போல நல்லது நடக்கும்னு நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 

மேலும் திரை பிரபலங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அதன்படி நடிகர் விஜய் சேதுபதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக உரிமையை பதிவு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “எல்லாருக்கும் வணக்கம். முதன் முதலாக ஓட்டு போடும் அத்தனை பேருக்கும் எனது வாழ்த்துகள். இது உங்களுக்கு மிகப்பெரிய பெருமைக்குரிய விஷயம். ஏனென்றால் 18 வயதில் நம் வீட்டில் ஏதேனும் முடிவெடுக்கவே நம்பள கேட்பாங்களா என்பது தெரியாது. ஆனால் இந்த நாட்டை நம்மை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்கிற பொறுப்பை உங்களிடம் கொடுத்திருக்கிறார்கள். அதனால் உங்க எல்லாருக்கும் வாழ்த்துகள். நானும் ஓட்டு போட்டு விட்டேன். நல்லது நடக்கும். அனைவரையும் போல நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். மக்களிடம் அரசியலை பற்றிய அறிவு அதிகமாக உள்ளது. மக்களின் விழிப்புணர்வை பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்தார்.