டிரெண்டிங்

பாட்டியின் விசித்திரமான ஆசையை நிறைவேற்றிய ஆஸி., போலீஸ்.. 100வது பிறந்த நாளில் நெகிழ்ச்சி!

JananiGovindhan

பூமியில் பிறக்கும் அனைவருக்குமே தங்களுடைய வாழும் காலம் முடிவடைவதற்குள் எப்படியாவது சிலவற்றை அனுபவித்து விட வேண்டும் என்ற விருப்பங்கள் பக்கெட் லிஸ்ட்டாக இருக்கும். தங்களுடைய இலக்கை அடைவதற்கான வழியை தேடியும், ஏற்படுத்திக் கொண்டும் பயனப்படுபவர்களும் உலகின் பல பகுதிகளிலும் இருப்பார்கள். ஆசைகளை பூர்த்தி செய்துக் கொள்வதற்கு என வயது வரம்புகள் ஏதும் பார்க்கப்படுவதில்லை.

அந்த வகையியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு தன் வாழ்நாளில் ஒரு முறையாவது போலீசாரால் கைது செய்யப்பட வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் ஆசையாக இருந்திருக்கிறது. அது அவரது நூறாவது பிறந்த நாளில் நிவர்த்தி செய்யவும் பட்டிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

பொதுவாக வயது மூப்படைந்தவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும், உடம்பில் பச்சைக் குத்திக் கொள்ள வேண்டும் போன்றவற்றையே விரும்புவர்கள். ஆனால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜீன் பிகென்ட்டன் என்ற பெண்மணியின் 100வது பிறந்தநாள் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதிதான் கொண்டாடப்பட்டிருக்கிறது.

ராணுவத்தில் செவிலியராக பல ஆண்டுகள் பணியாற்றிருந்த ஜீனின் 100வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு திடீரென வந்த விக்டோரியா மாகாண போலீசார் அவருடைய நீண்டநாள் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

செவிலியல் பணியில் இருந்து திருப்திகரமான மனநிலையோடு ஓய்வு பெற்றிருந்தாலும் ஜீன் தனது வாழ்நாளில் ஒரு முறைகூட மது குடித்ததும் இல்லை கைது செய்யப்பட்டதும் இல்லையாம். அதன் காரணமாக Narracan Gardens Residential Aged Care-ல் ஜீனின் பிறந்தநாள் பரிசாக, விக்டோரியா போலீஸார் சைரன் ஒலியை அலறவிட்டபடி மூதாட்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்கள்.

இது தொடர்பான புகைப்படங்கள் விக்டோரிய காவல்துறையின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது. அதில், “ஜீனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது போலீசார் நுழைந்ததால் எந்த தொந்தரவும் ஏற்பட்டிருக்கவில்லை. மேலும், ஜீனின் கையில் மெதுவாக கைவிலங்கிட்டு அவரது விருப்பத்துடன் அதிகாரப்பூர்வாக கைது செய்யப்பட்டிருக்கிறார்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக பேசியுள்ள ஜீன் பிகென்ட்டன், “இதுதான் எனக்கு சிறந்த பிறந்த நாளாக அமைந்திருக்கிறது. அவர்களை என்னை மிகவும் மென்மையாக நடத்தினார்கள். மிக்க நன்றி” எனக் கூறியிருக்கிறார்.