டிரெண்டிங்

கால்முறிந்து அவதிப்பட்ட கர்ப்பிணி ஆடு : அறுவை சிகிச்சை செய்த மருத்துவரின் மனிதநேயம்

webteam

வேலூரில் கால்முறிந்து அவதிப்பட்ட கர்ப்பிணி ஆட்டுக்கு அரசு கால்நடை மருத்துவர் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் அமுதவள்ளி. இவர் தனது வீட்டில் செல்லமாக 3 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு தெருவில் ஓடிய அவரது ஆடு மீது அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தை ஏற்றியதில், ஆட்டின் முன்னங்காலில் முறிவு ஏற்பட்டு துடிதுடித்தது. ஆசை வளர்த்த ஆடு துடிதுடிப்பதைக் கண்ட அமுதவள்ளி மனவேதனை அடைந்தார். அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த ஆட்டை விற்றுவிடுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

ஆட்டை தனது வீட்டில் ஒருவராக நினைத்து வளர்த்ததாலும், காயம்பட்ட ஆடு நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததாலும் விற்க மனம் இல்லாமல் வேலூரில் உள்ள கால்நடை பராமரிப்புத் மருத்துவமனைக்கு அமுதவள்ளி கொண்டுசென்றார். அங்கு ஆட்டை பரிசோதித்த மருத்துவர் ரவிசங்கர், ஆட்டின் காலில் எழும்பு முழுவதும் உடைந்துள்ளதால், அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான வசதி தற்போதைக்கு இல்லை என மருத்துவர் கூறியுள்ளார். ஆட்டை எப்படியாவது காப்பாற்றக்கோரி அமுதவள்ளி கேட்டுக்கொண்டதால். கால்நடை மருத்துவர் ரவிசங்கர் தனது சொந்த முயற்சியில் அறுவை சிகிச்சைக்கான உபகரணங்களை வரவழைத்து, ஆட்டுக்கு அறுவை சிகிச்சை செய்தார். தற்போது நிறைமாத கர்ப்பிணியான ஆடு நலமாக உள்ளது. மெல்ல மெல்ல கால் ஊன்றுகிறது.

அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர் ரவிசங்கர் கூறும் போது, ஆட்டுக்கு முன்னங்கால் எழும்பு முழுவதும் உடைந்திருந்ததால் மாவு கட்டு போட முடியாத நிலை இருந்தது. அதனால் மனிதர்களுக்கு செய்வது போல தகடு வைத்து அறுவை சிகிச்சை செய்து முடிந்துள்ளோம். 4 தகடுகளை வைத்து மேற்கொண்ட சிகிச்சையால் தற்போது ஆட்டினால் மெல்ல மெல்ல நிற்க முடிகிறது. இது தமிழகத்திலேயே முதல் முறையாக ஆட்டுக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையாகும் என்றார். அடுத்த 2 வாரங்களில் கால் சரியாகிவிடும் எனவும் தெரிவித்தார்.