குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வெங்கய்ய நாயுடுவுக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு தெரிவித்துள்ளது.
தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக எம்.பிக்கள். அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் வெங்கய்ய நாயுடுவுக்கு அதிமுக அம்மா அணி ஆதரவளிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
மேலும், நீட் தேர்வில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்துவது பற்றியும் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடகா தர வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்துவது பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
வரும் 25-ஆம் தேதி டெல்லியில் புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக வரும் 24-ஆம் தேதி முதலமைச்சர் டெல்லி செல்ல உள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.