தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க 158 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
குடிநீர் பற்றாக்குறை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருந்தார். தமிழகத்தில் அதிக அளவில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளதாகவும், குடிநீர் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் ஸ்டாலின் பேசினார்.
25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அறிவிக்கப்பட்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களின் நிலை என்ன என்பதை வெள்ளை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இதற்குப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் வேலுமணி, தேவையான குடிநீர் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், குடிநீர் பற்றாக்குறை பிரச்னையை தீர்க்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆழ்துளை கிணறுகள் அமைத்து லாரிகள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்வதற்கான திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார். மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 23 ஆயிரம் குடிநீர் திட்ட பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும், நடப்பு ஆண்டில் குடிநீர் பற்றாக்குறையை போக்க 158 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடப்பதாகவும் தெரிவித்தார்.
மதுரையில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க நிரந்தர குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாகவும், சென்னையில் இந்த ஆண்டு இறுதிவரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.