மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அவரது நினைவிடமாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
முன்னதாக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும். அவரது மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும்’என தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓரணியினர் பிரிந்து சென்றனர். தற்போது டிடிவி தினகரன் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி என அதிமுக மூன்றாக பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அணியில் இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர், சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என்கிற முக்கியக் கோரிக்கைகளை ஆரம்பம் முதலே முன் வைத்து வந்தனர். இந்த நிலையில் துணைப்பொதுச்செயலாளர் தினகரனை நியமித்தது செல்லாது என்று எடப்பாடிர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைப்பு சுமூகமாக நடைபெறும் எனக் கூறப்படுகிறது.