திருமாவளவன், விசிக குறித்து ட்விட்டரில் அவதூறாக பேசுவதாக ஹெச். ராஜா மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மெர்சல் திரைப்பட விவகாரத்தில் விஜயை வளைத்துப்போட பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டியிருந்தார். இதனை மறுத்துப் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திருமாவளவன் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக விமர்சித்திருந்தார். இதனால் மெர்சல் யுத்தம், பாஜக - விசிக யுத்தமாக மாறி தொடர் போராட்டமாக உருவெடுத்துள்ளது. தமிழிசையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில், “கட்டப்பஞ்சாயத்து, வன்முறை, ரெளடித்தனம், இதுதான் விடுதலை சிறுத்தைகளின் அடையாளம். இவர்களை தமிழக அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார். அதேபோல் மற்றொரு ட்விட்டர் பதிவில், “கரூரில் பா.ஜ.க.மாநில பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு முன்பு கூடிய 6 வி.சி.க ரெளடிகள் வன்முறை செயலில் ஈடுபட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், தன்னையும், கட்சியையும் குறித்து இணைதள பக்கத்தில் தவறாக விமர்சித்ததற்காக ஹெச்.ராஜா மீது, திருமாவளவன் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு இன்று அளிக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னிரசு இந்த மனுவை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வன்னியரசு ஹெச்.ராஜா அவதூறாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.