ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்கி வளர்த்தது பாஜக பிரதமர்கள் தான் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30, டிசம்பர் 7, 12, 16, 20 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக நடைபெறவுள்ளது. டிசம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அமித்ஷா, “ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்கியவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். அதேபோல், அந்த மாநிலத்தை அழகுபடுத்தி வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்பவர் பிரதமர் மோடி” என்றார்.
மேலும், “முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையிலான அரசு ஜார்க்கண்ட் மாநிலத்தை கடந்த 5 ஆண்டுகளில் நக்சலைட் ஆதிக்கம் இல்லாத மாநிலமாக மாற்றியுள்ளார். மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்தால் வளர்ச்சியின் உச்சக்கட்டத்திற்கு ஜார்க்கண்ட்டை பாஜக கொண்டு செல்லும்” என்றார் அமித்ஷா.
இதனிடையே, சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் மண்ணான லடேஹரில் இருந்து தேர்தல் பிரசாரம் செய்ய வாய்ப்பு அளித்த ஜார்க்கண்ட் மாநில பாஜகவினருக்கு அமித்ஷா நன்றி தெரிவித்தார்.