டிரெண்டிங்

“பிரதமர் மோடி வேஷ்டி அணிந்தது அழகாக இருந்தது” - கவிஞர் வைரமுத்து

“பிரதமர் மோடி வேஷ்டி அணிந்தது அழகாக இருந்தது” - கவிஞர் வைரமுத்து

webteam

திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் கவிஞர் வைரமுத்து சந்தித்து திருவாரூரில் அமையுள்ள ‘கலைஞர் அருங்காட்சியகம்’ கட்டிடத்திற்கான நிதியை வழங்கினார். 

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கவிஞர் வைரமுத்து, “திமுக தலைவர் ஸ்டாலினை வாழ்த்த வந்தேன். காரணம், கலைஞர் பிறந்த மண்ணில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தற்கு ஒரு தகப்பனுக்கு மகன் செய்த கடமை போல் இல்லாமல், ஒரு தலைவனுக்கு தொண்டன் கடமை செய்வது போல் தளபதி ஸ்டாலின் செய்கிறார். அன்று கலைஞர் பிறந்த அதே மண்ணில் மீண்டும் அருங்காட்சியகம் வடிவில் ஒருமுறை பிறக்கிறார்” எனக் குறிப்பிட்டார். மேற்கொண்டு செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார். 

கேள்வி: பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது தமிழரின் பாரம்பரியம் வேஷ்டி சட்டை அணிந்ததை பற்றி உங்கள் கருத்து ?

“உடை என்பது மனதையும் உடலையும் பொறுத்தது. பிரதமர் மோடி வேஷ்டி சட்டை அணிந்தது பார்ப்பதற்கு அழகாகதான் இருந்தது. ஆனால் அதையே அவர் தொடர வேண்டும் அதுவே எங்கள் விருப்பம்”

கேள்வி: தொடர்ச்சியாக மத்திய அரசும், மோடியும் தமிழை மையப்படுத்தியே பேசுகிறார்களே ?

“தமிழர்கள் சொற்களை விரும்புவதை விட செயல்களைதான் அதிகம் விரும்புவார்கள். செயல்களால் மட்டும் ஒரு மொழி; ஒரு இனம்; மேன்மை பெறும். சொல் என்பது "பித்தளை" எனவும் செயல் என்பது "தங்கம்" போல் என்று ஒரு பழமொழி உண்டு. அதன்படி மத்திய அரசு தமிழை மேற்கோள் காட்டுவதை விட தமிழை செயலுக்கு கொண்டு வந்தால் தமிழர்கள் இன்னும் மேன்மை பெறுவார்கள். தமிழை வழக்காடு மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் மாற்ற வேண்டும்”

கேள்வி: கீழடியில் அருக்கட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது ? உங்கள் கருத்து ?

“கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கும் முடிவை வரவேற்கிறேன். அருங்காட்சியகம் மிகப் பெரிய அளவில் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். பொதுவாக தொல்லியல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனை மாநில அரசுக்கு உரிமை கொடுக்க வேண்டும்” என்றார்.