டிரெண்டிங்

மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ரயில்வே துறை கைவிட வேண்டும் - வைகோ

webteam

மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ரயில்வே துறை கைவிட வேண்டும் என வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''17 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்ற, உலகின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றது இந்தியன் ரயில்வே. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகின்ற பல்வேறு நடவடிக்கைகள், அந்தத் துறையை முடக்கி, தனியார் கைகளில் கொடுப்பதற்கான திட்டங்கள், படிப்படியாக நிறைவேற்றப்படுவதைக் காட்டுகின்றது.

அதன் ஒரு கட்டமாக, ரயில்வே வாரியம் ஜூன் 17 புதன்கிழமை வெளியிட்டு இருக்கின்ற ஆணையில், இந்தியா முழுவதும் உள்ள 17 ரயில்வே மண்டலங்களில் இயங்கும் 508 பயணிகள் தொடரிகளை, விரைவுத் தொடரிகளாக மாற்றுவதற்கு விரைந்து முடிவு எடுத்து, இரண்டே நாட்களுக்கு உள்ளாகத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு இருந்தது.

அவ்வாறு, விரைவுத் தொடரிகளாக மாற்றினால், பயணிகள் கட்டணமும், இரண்டு மடங்கு உயர்த்தப்படும்.மக்களைக் கடுமையாகப் பாதிக்கின்ற நடவடிக்கைகளை, ரயில்வே துறை கைவிட வேண்டும். பயணிகள் ரயில் போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும். குறிப்பாக, சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கும், சென்னையில் இருந்து கோவை பாலக்காடு வரையிலும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு பயணிகள் தொடரிகள் ஓடுவதற்கு, ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன்மூலம், சாலைப் போக்குவரத்து நெருக்கடியை வெகுவாகக் குறைக்கலாம் விபத்துகளைக் குறைக்கலாம். குறைந்த செலவில், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யலாம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.