டிரெண்டிங்

‘பாஜக பிராமணர் கட்சி என நான் சொன்னேனா? ஆதாரம் காட்டுங்கள்?” - வி.பி.துரைசாமி விவாதம்

webteam

பாஜக தலைவர் முருகனைச் சந்தித்தது தொடர்பாகவும், அக்கட்சியில் இணைந்தது தொடர்பாகவும் புதிய தலைமுறை நிகழ்ச்சியில் வி.பி.துரைசாமி பகிர்ந்துகொண்டார்.

திமுகவிலிருந்து நீக்கப்பட்ட துரைசாமி, பாஜகவில் இணைந்தது தொடர்பாக புதிய தலைமுறையின் ‘இன்று இவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்று விளக்கமளித்தார். அப்போது நெறியாளரின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், தான் நட்பு ரீதியாகவும், தனது சமுதாயத்தைச் சேர்ந்தவர் பாஜகவின் தலைவராகியதற்காகவும் மட்டுமே முருகனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கச் சென்றதாகக் கூறினார். ஆனால் அதற்குள் தன்னைப் பற்றி தவறான தகவல்கள் தலைமைக்குச் சென்றதால், தான் நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தன்னிடம் ஸ்டாலின் விளக்கம் கேட்கவில்லை என்றும், அவரிடம் சென்று தானும் விளக்கம் கூறவில்லை என்றும் சொன்னார். அதன்பின்னரே தான் பாஜகவில் இணைந்ததாகவும், பிரதமர் மோடி தேசத்தைக் காப்பாற்றுகிறார் எனவே இணைந்ததாகவும் கூறினார். மற்றவர்கள் தேசத்தைக் காப்பதாக வார்த்தையால் சொல்வதாகவும், மோடியும், பாஜகவும் அதனைச் செய்து காண்பிப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே தான் பாஜகவைப் பிராமணர் கட்சி என்று கூறியதற்கு ஆதாரத்தைக் காட்டுமாறு வி.பி.துரைசாமி கேட்டார். அதற்கு புதிய தலைமுறை நெறியாளரும் செய்திகளில் வெளியான ஆதாரத்தைக் காண்பித்தார். பின்னர் பேசிய வி.பி.துரைசாமி, தனக்கு எம்.பி பதவி கொடுக்காததில் எந்தக் கோபமும் இல்லை எனவும், தனக்கு அங்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.