டிரெண்டிங்

தேர்தல் அதிகாரிகளை எதிர்த்து நடந்த லாரி ஓட்டுநர்கள் போராட்டம் வாபஸ்

webteam

தேர்தல் அதிகாரிகள் உணவுப்படி கொடுக்கவில்லை எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட உத்திரமேரூர் அரசு கலைக்கல்லூரி லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட 21 ஜோன்களில் 300 க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இங்கு கடந்த மூன்று நாட்களாக லாரிகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக தினசரி வாடகையை மாவட்ட நிர்வாகம் தரவில்லை எனப் புகார் கூறி 22 லாரிகளின் ஓட்டுநர்கள்  மற்றும் கிளீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடுக்க வேண்டிய படித்தொகையை உடனடியாக கொடுக்க வேண்டும் இல்லையெனில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து செல்ல மாட்டோம் என வலியுறுத்தி லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் உத்திரமேரூர் தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. 

இதையடுத்து காவல்துறையினர் லாரி ஓட்டுநர்களிடம் சமரசம் பேசினர். ஆனால் லாரி உரிமையாளர்கள் செவிசாய்க்கவில்லை. இதைத்தொடர்ந்து உத்திரமேரூர் தாசில்தார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் மூன்று நாள் உணவுப்படியான ரூ.20 ஆயிரத்து 560 விநியோகம் செய்யப்பட்டதையடுத்து லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.