cat
cat @Dream\twitter
டிரெண்டிங்

‘அது பூனையில்ல, என் அப்பா’- மனைவியால் கதிகலங்கிய கணவனுக்கு விவாகரத்து நோட்டீஸ்! என்ன நடந்தது?

Janani Govindhan

திணுசு திணுசான காரணங்களை முன்வைத்து விவாகரத்து கேட்பது உலகம் முழுவதும் நடந்து வருகிறது. அப்படியொன்றுதான் இங்கும் நடந்துள்ளது. என்னவெனில், மனைவி ஆசையாக வளர்த்த பூனையை, கணவர் காப்பகத்தில் விட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மனைவி, கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்!

இது தொடர்பாக லண்டனை சேர்ந்த பிரபல இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதன்படி, தான் வளர்க்கும் அந்த பூனை தன்னுடைய தந்தையின் மறுபிறவியென தான் கருதிவந்த நிலையில், அதை தன் கணவர் காப்பகத்தில் விட்டுவிட்டாரென குற்றஞ்சாட்டியுள்ளார் அப்பெண். இதனால் தனக்கு ஏற்பட்ட விரக்தியினாலேயே கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டதாகவும் அப்பெண் குறிப்பிட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக அப்பெண் பேசியதாக சொல்லப்படும் ரெடிட் தள பதிவில், “அவனை (பூனையை) குழந்தையாக இருக்கும்போது மீட்டெடுத்தேன். அப்போதே என்னுடைய உள்ளங்கையில் தவழ தொடங்கிவிட்டான். இரண்டு ஆண்டுகளாக என்னுடனேயே இருந்தான். நான் இதை சொல்லும் போது பைத்தியக்காரத்தனமாக தோன்றலாம். ஆனால் என் தந்தையின் மறுபிறவியாகவே பென்ஜியை (பூனை) நினைத்திருந்தேன்.

அவன் கண்களை பார்க்கும்போதெல்லாம் பூனை என்பதை தாண்டி வேறொரு நல்லுணர்வே என்னுள் ஏற்படும். ஆனால் என் கணவருக்கு இது விசித்திரமானதாகவும், ஆரோக்கியமற்றதாகவும் தெரிந்தது. குறிப்பாக என் அப்பாவின் ஆன்மா பூனைக்குள் இருப்பதாக நான் நம்புவது கணவருக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அவருக்கு அசவுகரியத்தையும் கொடுப்பதாக கூறி வந்தார்.

இந்த நிலையில் என் அம்மா மற்றும் சகோதரியுடன் விடுமுறைக்காலத்தை கழிக்க சுற்றுலா சென்றிருந்தேன். அது முடிந்ததும் வீடு வந்து சேர்ந்த போதுதான் என்னுடைய பென்ஜி இல்லாமல் போனது தெரிந்தது. அதுபற்றி கணவரிடம் கேட்டபோது, பூனையை தன்னுடைய சக ஊழியரிடம் கொடுத்துவிட்டேன் என்றார். இதனையடுத்து அந்த நபரிடம் பூனையை திருப்பி கேட்டபோது பூனையை கொடுக்க மறுத்துவிட்டார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பூனையை திருப்பி வாங்க முடியாததால் அந்த பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார். குறிப்பாக, தன்னை விட்டு பிரிந்திருக்கும் பூனை பென்ஜி எப்படி புது இடத்தில் வாழும் என்ற நினைப்பால் வேதனையில் இருந்திருக்கிறார். ஒருகட்டத்தில் பூனையை திரும்ப பெற போலீசிடம் புகார் கொடுத்ததோடு, அதனை வாங்கியவரின் மனைவியிடம் விசாரித்திருக்கிறார். ஆனாலும் அவரும் இதுகுறித்து எந்த தகவலும் தெரியாது என்று கூறியிருக்கிறார்.

இதையெல்லாம் வைத்து கணவரிடம் போலீஸ் தீர விசாரித்தபோது பூனை பென்ஜியை தனது சக ஊழியரிடம் கொடுக்காமல் காப்பகத்தில் விட்டதை சொல்லியிருக்கிறார் அவர். இதன் பிறகே அந்த மனைவி விவாகரத்து நோட்டீஸ் விடுத்திருப்பதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.