இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அதிமுக அணிகளாக பிரிந்திருப்பது தற்காலிகமான பிரச்னைதான் என்று தம்பிதுரை கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 124 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ள நிலையில், அதிமுகவில் யாரும் பிளவு ஏற்படுத்திவிட முடியாது. இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அதிமுக அணிகளாக பிரிந்திருப்பது தற்காலிகமான பிரச்னை தான் என்றும் தம்பிதுரை விளக்கமளித்தார்.
அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக அணிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே அனைத்து தொண்டர்களும் விரும்புவதாக கூறினார். இரட்டை இலை சின்னம் மீட்கப்பட வேண்டும் என்பதில் அதிமுகவினர் உறுதியாக இருப்பதாகவும் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து பிரிந்த சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி தங்கள் அணிக்கு வந்தால் அவரை ஏற்றுக் கொள்வோம் என கூறினார்.