அரசு மற்றும் காவல் துறை தரப்பிலிருந்து அறிவிக்கப்படும் பொதுநலன் சார்ந்த அறிவிப்புகள் பல தவறாது மக்களின் கவனத்தை ஈர்த்துவிடும். அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநில போலீசார் மேற்கொண்டுள்ள புதிய நடவடிக்கை ஒன்று ட்விட்டரில் பகிரப்பட்டும் நெட்டிசன்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது.
பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ரெயின் ரவுடிசத்திற்கு கடிவாளம் போடும் வகையிலான நடவடிக்கையைதான் உத்தரப் பிரதேச மாநில காவல்துறை கையில் எடுத்திருக்கிறது.
அதன்படி, ”வாகனங்களில் செல்வோர் நடந்து செல்வோர் மீது சாலையில் தேங்கியுள்ள மழை நீரை தெளிக்கும் வகையில் வண்டி ஓட்டுவது அதனால் பாதிக்கப்படுவோரை குளிர்விக்கவா செய்யும்? மாறாக கொதிப்படையவேச் செய்யும்.
மற்றவர்கள் மீது மழையினால் துன்பம் நேரச் செய்வது ஒன்றும் உண்மையில் ஜாலியான விளையாட்டு கிடையாது. மழை வந்தாலும் வெயில் அடித்தாலும் மக்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்” என வீடியோ வெளியிட்டு மழை காலத்தின் போது அட்டகாசம் செய்வோருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது உத்தரப் பிரதேச போலீஸ்.