நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தருமபுரியில் பிரச்சாரத்தை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் பகிர்ந்து கொண்ட கருத்துகளை பார்க்கலாம்.
கேள்வி : வேலூர், கள்ளக்குறிச்சி, சேலம் பரப்புரையை முடித்துவிட்டு தற்போது தருமபுரியில் இருக்கிறீர்கள். உங்களுக்கான கள நிலவரம் எப்படி இருக்கிறது?
பதில் : கண்டிப்பாக சாதமாக இருக்கிறது. அதை எப்படி சொல்கிறேன் என்றால், சேலத்தில் பிரச்சாரம் பண்ணும்போது எதிரே வந்த அதிமுக தொண்டர்களே வாழ்த்துகள். திமுகதான் வெற்றி பெறும் என தெரிவித்தனர். இந்தியா முழுக்க மோடி அலை வீசும்போதே தமிழகத்தில் பலிக்கவில்லை. தற்போது இந்தியா முழுவதும் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது. மக்கள் கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டிய நேரம் பார்க்கிறார்கள்.
கேள்வி : 2016 ல் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒருவர் தற்போது தருமபுரியில் எம்.பியாக உள்ளார். அவருக்கு எதிராக நீங்கள் ஒருவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளீர்கள். எப்படி அவருடைய செயல்பாடுகள் இருக்கும். உங்களுடைய வியூகம் என்ன?
பதில் : தற்போது எம்பியாக உள்ளவர் எந்த செயல்பாடும் செய்யவில்லை. அவரின் புள்ளிவிவரத்தை சேகரித்து வைத்துகொண்டுதான் நான் பரப்புரையில் ஈடுபடுகிறேன். இப்படி ஒரு வேட்பாளரை தேர்வு செய்துள்ளீர்கள். வெறும் 40 சதவீதம்தான் அவர் நாடாளுமன்றத்திற்கே போயுள்ளார். அதில் 12 விவாதங்கள் மட்டுமே அவர் கலந்து கொண்டுள்ளார். அதிலும் ஒரு கேள்வி கூட தருமபுரியை பற்றி அவர் கேட்டதில்லை. இப்படி செயல்படாத ஒரு எம்.பியாக அவர் இருந்துள்ளார் என எடுத்துக்கூறிதான் மக்களிடம் ஓட்டு கேட்கிறேன். எந்த தைரியத்தில் அவர் திரும்ப வந்து மக்களிடம் ஓட்டு கேட்க போறார்ன்னு எனக்கு தெரியவில்லை. மக்கள் ரொம்ப கோவமாக இருக்கிறார்கள் என்பதுதான் என்னுடைய அபிப்ராயம்.
கேள்வி : உங்களுடைய பேச்சில் இடைத்தேர்தல் குறித்தும் பேசுகிறீர்கள். இடைத்தேர்தலை பொறுத்தவரை உங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. சட்டமன்றத் தொகுதி நிலவரம் எப்படி இருக்கிறது?
பதில் : இதுவரை 4 இடைத்தேர்தல் தொகுதியில் நான் பிரச்சாரம் செய்துள்ளேன். எல்லா இடத்திலேயும் மோடி எதிர்ப்பு அலை இருக்கிறது. மோடின்னு பேரை சொன்னாலே கெட்டவார்த்தையில் திட்டுகிறார்கள். அந்த அளவுக்கு கடுப்பில் இருக்கிறார்கள். இந்த கூட்டணியே பிளாக்மெயில் செய்து உருவாக்கப்பட்ட கூட்டணிதானே. தலைமை செயலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் குட்கா ரெய்டு. எங்களுடன் கூட்டணி வைத்து கொண்டால் ஆட்சியை தொடரவிடுவோம் என மிரட்டியுள்ளனர். ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காகவே கூட்டணியை இவர்களும் ஒப்புக்கொண்டார்கள். நாட்டையே ஆளுகிற கட்சிக்கு வெறும் 5 தொகுதிகள் தான் கொடுத்தாங்க. அவர்களுக்கும் தெரியும்.
கேள்வி : தருமபுரியில் உங்கள் எம்.பி வேட்பாளர் வெற்றி பெற்றால் அவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்?
பதில் : கண்டிப்பாக எங்கள் வேட்பாளர் வெற்றி பெற்றால், மக்கள் குரலாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்.
கேள்வி : கொங்கு மண்டலத்தில் தற்போது கள நிலவரம் எப்படி இருக்கு?
பதில் : முந்தைய தேர்தலில் ஜெயலலிதாவால் அதிமுக ஒரு கட்சியாக இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. அன்றைய நிலவரத்தையும் தற்போது நிலவரத்தையும் ஒன்றாக இணைத்து பார்க்க வேண்டாம். கண்டிப்பாக கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு பின்னடைவுதான்.
கேள்வி : திமுகவில் வாரிசுகள் அதிகம் போட்டியிடுவதாக குற்றச்சாட்டு எழுகிறது. அதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில் : நான் அதை வாரிசாக பார்க்கவில்லை. தகுதியான திறமையான வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளோம். ஸ்டாலின் கூறியது போல் ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டாம். தகுதியை பாருங்கள்.