கிராம சபைக் கூட்டத்தை நான் தான் கண்டு பிடிச்சேன் என்று அறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம் எனக்கூறி உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
கமல்ஹாசன், திமுக இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வரும் நிலையில், திமுகவை மீண்டும் கமல் விமர்சித்தார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கிராம சபைக் கூட்டம் 25 ஆண்டுகள் நடைபெற்று வருகிறது என்றும், அப்போது என்ன செய்தீர்கள் எனவும் வினவினார். அத்துடன், சட்டப்பேரவையில் தாம் சட்டையை கிழித்துக்கொண்டு நின்றதில்லை எனவும் திமுக தலைவர் ஸ்டாலினை மறைமுகமாக சாடினார்.
கமலின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு புதுச்சேரியில் பதில் அளித்த மு.க.ஸ்டாலின், தான் அரசியல் மட்டுமே பேசுவதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து கமல்ஹாசனை உதயநிதி ஸ்டாலின் நேற்று விமர்சித்திருந்தார். அதில், “கமல்ஹாசன் அறியாமையில் பேசுகிறார். திமுக தலைவர் முதல்முறை கிராமத்திற்கு போவதாக கமல் கூறுகிறார். அது தவறானது. அவரது விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்” என நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கிராம சபைக் கூட்டத்தை நான் தான் கண்டு பிடிச்சேன் என்று அறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம் எனக்கூறி உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் திமுக தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டங்களில் பேசிய பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் அதில் இடம், நாள் உள்ளிட்ட தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதனிடையே இன்று திமுக மீதான கமல்ஹாசனின் விமர்சனத்துக்கு பதில் கூறும் விதமாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் செய்திக்கட்டுரை வெளியாகியது. அதில், “கடை விரித்தேன் கொள்வாரில்லை என்பதை போல கமல்ஹாசன் நிதானமின்றி பிதற்றுகிறார்.
கமல் பேசுவது என்ன? ஏன் இப்படி பேசுகிறார் என்று புரியாது.கேட்போரைத் தான் சட்டையை கிழித்துக்கொள்ள வைப்பாரே தவிர அவர் ஒருநாளும் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டார்.
கிராம சபைக் கூட்டத்தை ஸ்டாலின் காப்பியடித்ததாகக் கூறியதன் மூலம் கமல்ஹாசன் தனது அரசியல் கத்துக்குட்டித்தனத்தை வெளிச்சம் போட்டுகாட்டியுள்ளார்” என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.