டிரெண்டிங்

”புண் தானே என்று அஜாக்கிரதையாக இருந்துவிடாதீர்கள்” அல்சர் நோயின் வகைகள், அறிகுறிகள்!!

Sinekadhara

அல்சர் என்பவை உடலில் எங்கு வேண்டுமானாலும் வரக்கூடிய புண்கள். உடலில் வெளியே தெரியக்கூடிய புண்களை விட உள்ளே பொதுவாக வயிற்றின் உட்பகுதியில் குடலில் வரக்கூடிய புண்கள் அதாவது பெப்டிக் அல்சர் என்று சொல்லக்கூடிய புண்களை கவனிக்காவிட்டால் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

பெப்டிக் அல்சர் (Peptic Ulcer)

இந்த அவசர வாழ்க்கை முறையில் மன அழுத்தம் அல்லது துரித உணவுகளால் பெப்டிக் அல்சர் ஏற்படுகிறது. அல்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாயிலிருந்து வயிறு வரை உணவுப்பாதை முழுவதும் புண்கள் ஏற்பட்டு எரிச்சல், வலி உண்டாகும். ஹெலிகோபாக்டர் பைலோரி என்ற ஒருவித பாக்டீரியாத் தொற்றினால் புண்கள் வருகிறது.

இதில் இரைப்பை அல்சர்(gastric ulcers), ஓசோஃபேஜியல் அலசர் (oesophageal ulcers) மற்றும் டியோடெனல் அலசர் (duodenal ulcers) என மூன்று வகைகள் இருந்தாலும் இதன் அறிகுறிகள் பொதுவாக ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

அறிகுறிகள்

வயிற்றில் வீக்கம் அல்லது வயிறு நிரம்பிய உணர்வு
நெஞ்செரிச்சல்
குமட்டல்
நெஞ்சு வலி
எடை குறைதல்

தமனிப் புண்கள்(Arterial Ulcer)

இது உடலின் வெளிப்புறத்தில் வரக்கூடியது. மூட்டு, கால்கள், கால்விரல்கள் மற்றும் குதிகால் போன்ற இடங்களில் வரக்கூடியவை. திசுக்களில் போதுமான ரத்த ஓட்டம் இல்லாததால் இந்த வகை புண்கள் வருகின்றன. மேலும் இந்த புண்கள் குணமாக பல மாதங்கள் கூட ஆகலாம். இந்த புண்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் தொற்றுநோயாக மாறி பரவிவிடும்.

அறிகுறிகள்

சிவப்பு, மஞ்சள் மற்றும் கறுப்பு நிற புண்கள்
தோலில் முடி உதிர்தல்
முழங்கால், கணுக்கால், குதிகால், பாதங்களில் வலி
பாதிக்கப்பட்ட இடங்கள் தொடும்போது குளிர்ச்சியாக இருக்கும்.

வாய்ப்புண் (Mouth Ulcer)

வாய்ப்புண்கள் வெவ்வேறு அளவுகளில் இருக்கும். உணவு சாப்பிடும்போதும், சிறிது பானம் குடித்தால்கூட மோசமான வலியை ஏற்படுத்தும். புகை பிடித்தல், நாக்கைக் கடித்தல், வாய்க்குள் காயம், ப்ரேஸ்கள், அமிலத்தன்மை அதிகமாதல், வாய் சுத்தமின்மை மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் இதுபோன்ற புண்கள் ஏற்படுகின்றன.

அறிகுறிகள்

புண்களைச் சுற்றி வீக்கம்
மெல்லுவதில் பல் துலக்குவதில் சிரமம்
உப்பு, காரம் மற்றும் புளிப்பு உணவுகளால் எரிச்சல்
பசியின்மை

வாயில் ஏற்படும் இதுபோன்ற புண்கள் எந்த சிகிச்சையுமின்றி இரண்டு வாரங்களுக்குள் மறைந்துவிடும். இல்லாவிட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது.