டிரெண்டிங்

இரட்டை இலை சின்னம் யாருக்கு?: இன்று இறுதி விசாரணை

இரட்டை இலை சின்னம் யாருக்கு?: இன்று இறுதி விசாரணை

Rasus

இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு விசாரணை தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெறுகிறது.

முடக்கப்பட்ட அதிமுக கட்சிப் பெயர், மற்றும் இரட்டை இலைச் சின்னத்திற்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் டிடிவி தினகரன் அணியினரும் உரிமை கோரியிருந்த நிலையில் இது தொடர்பான இறுதி விசாரணை, டெல்லி தலைமைத்தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 6-ம் தேதி இரு தரப்பும் தங்கள் வாதங்களை முன்வைத்தன. இதில் 44 எம்பிக்களும் 116 எம்எல்ஏக்களும் 2,000-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக ஈபிஎஸ்-ஒபிஎஸ் அணி சார்பில் வாதிடப்பட்டது, ஆனால் எதிரணியினர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த ஆவணங்கள் கட்டாயப்படுத்தி தயாரிக்கப்பட்டவை, என தினகரன் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை அக்டோபர் 13-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதனிடையே, இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதிகட்ட விசாரணையை 13-ம் தேதியில் இருந்து 21-ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா, வேறு அலுவல் காரணமாக 13-ஆம் தேதி வர இயலாது என கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து, 13-ஆம் தேதி நடைபெறவிருந்த விசாரணை இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்து இன்று விசாரணை நடைபெறுகிறது.