தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி அணிக்கே ஒதுக்கி தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தேர்தல் ஆணையம் ஓ.பன்னீர் செல்வம்- எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அதிமுக எம்.பி மைத்ரேயன் கூறியுள்ளார். மேலும் சின்னம் கிடைத்த பிறகு எதிர்கொள்ளும் முதல் தேர்தலான ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பது ஈ.பி.எஸ்க்கும், ஓ.பி.எஸ்க்கும் கிடைத்த வெற்றி என சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார். தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்பது நிரூபணம் ஆகியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரட்டை இலை சின்னமும் கட்சியின் பெயரும் கிடைத்திருப்பது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுக தொண்டன் வாழ்வில் இன்றைய தினம் ஒரு பொன் நாள் எனவும் அவர் தெரிவித்தார்.
சசிகலாவின் சூழ்ச்சியால் இழந்த இரட்டை இலை சின்னத்தை, ஈபிஎஸ் - ஓபிஎஸ் இணைந்து மீட்டுள்ளதாக கே.பி.பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து, கட்சியை சிறப்பாக வழிநடத்தி செல்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.