இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் 6வது முறையாக இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
முன்னதாக கடந்த 1ம் தேதி டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்கள் அனைத்தும் உண்மையானவையே என்று முதலமைச்சர் பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் அப்போது வாதிட்டார். குறுக்கு விசாரணை கோரும் தினகரன் தரப்பு வாதத்தை ஏற்கக்கூடாது என்றும் முதல்வர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. பிறகு வாதாடிய தினகரன் தரப்பு வழக்கறிஞர் ஹன்சாரியா, இரட்டை இலைச் சின்னத்தை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்பது தங்கள் நிலைப்பாடல்ல என்றார். மேலும் ஜெயலலிதாவை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க பின்பற்றிய அதே வழிமுறையே சசிகலாவை பொதுச் செயலாளராக்கிய போதும் கடைபிடிக்கப்பட்டதாக ஹன்சாரியா வாதிட்டார்.
அவரைத் தொடர்ந்து தினகரன் சார்பில் அபிஷேக் சிங்வி வாதத்தை தொடங்கினார். வழக்கின் விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு (நவ.6) தள்ளி வைக்க வேண்டும் என்றும் அதற்குள் வாதங்களை முடித்துக்கொள்வதாகவும் சிங்வி தெரிவித்தார். இதையடுத்து விசாரணையை நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரி அறிவித்தார். உண்மையான அதிமுக தாங்கள்தான் என்றும், இரட்டை இலைச் சின்னம் தங்களுக்கே என்றும் அக்கட்சியின் இரு அணிகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. இதையடுத்து இது தொடர்பான வழக்கை தேர்தல் ஆணையம் விசாரித்து வருகிறது.