இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை முதல்வர் அணி மற்றும் டிடிவி தினகரன் அணி உரிமை கோருவதால் அது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணைக்காக முதல்வர் அணி சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம், எம்.பி மைத்ரேயன், முன்னாள் எம்.பிக்கள் மனோஜ் பாண்டியன், கே.சி.பழனிசாமி ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
டிடிவி தினகரனும் டெல்லி சென்றிருக்கிறார். நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையின்போது, டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் அன்சாரியா, கட்சியின் சட்டவிதியின் படியே டிடிவி தினகரன் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நவம்பர் 10ஆம் தேதிக்குள் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.