டிரெண்டிங்

முடக்கப்பட்ட இரட்டை இலை மீண்டும் துளித்த கதை

முடக்கப்பட்ட இரட்டை இலை மீண்டும் துளித்த கதை

Rasus

ஜெயலலிதா மறைந்த சில மாதங்களில் சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் அதிமுக பிளவுபட்டது. இந்நிலையில் மார்ச் 12-ம் தேதி நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். சசிகலா தரப்பும் இரட்டை இலைக்கு உரிமை கோரிய நிலையில் அதிமுக என்ற பெயரையும் இரட்டை இலைச் சின்னத்தையும் முடக்குவதாக மார்ச் 23-ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கிடையில், இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் ஏப்ரல் 26-ம் தேதி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த நிலையில் செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இரட்டை இலைச் சின்னத்தை மீட்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்ட‌து.

இந்தச் சூழலில் இரட்டை இலைச்சின்னம் தொடர்பாக அக்டோபர் 31-க்குள் தேர்தல் ஆணையம் முடிவெ‌டுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. பின்னர் இது நவம்பர் 10-க்கு நீட்டிக்கப்பட்டது. செப்டம்பர் 29-ஆம் தேதி, ஈபிஎஸ், ஓபிஎஸ் அணி சார்பில் ஆவணங்கள், 2,140 பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதேபோல, தினகரன் தரப்பில் 1000 பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து அக்டோபர் 6-ம் தேதி இரு தரப்பு வாதங்கள் நடைபெற்றன.

இதன் பின் அக்டோபர் 13, 16, 23 ஆகிய தேதிகளில் விசாரணை நடைபெற்றது. தொடந்து நவம்பர் மாதமும் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடைபெற்றது. இறுதியாக நவம்பர் 13-ஆம் தேதி இரண்டு தரப்புகளில் இருந்தும் தேர்தல் ஆணையத்தில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து உத்தரவு பிறப்பிப்பதை தேர்தல் ஆணையம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில் முடக்கி வைக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் பழனிசாமி அணிக்கே ஒதுக்கி தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.