டிரெண்டிங்

இரட்டை இலை சின்னம் வழக்கு 15-ஆம் தேதி விசாரணை: உச்சநீதிமன்றம்

இரட்டை இலை சின்னம் வழக்கு 15-ஆம் தேதி விசாரணை: உச்சநீதிமன்றம்

Rasus

இரட்டை இலை சின்னம் தொடர்பாக அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை 15-ஆம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மற்றும் வி.கே.சசிகலா சார்பில் தனித்தனியாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்ததுடன், இந்த விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு சரியே என்றும் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பில் கடந்த 5-ஆம் தேதி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தலைமை தேர்தல் ஆணையம் இரட்டை இலைச் சின்னத்தை ஓ.பி.எஸ் ‌மற்றும் ஈ.பி.எஸ் அணிக்கு வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இடைக்காலமா‌க குக்கர் சின்னம் ஒதுக்க வே‌ண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இம்மனு மீது வரும் 15-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அன்றைய தினமே குக்கர் சின்னத்தை ஒதுக்கக் கோரி தினகரன் தொடர்ந்து வழக்கும் விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வரும் 14-ஆம் தேதி வரை குக்கர் சின்னத்தை வேறு யாருக்கும் ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.