தவெக பரப்புரை கூட்டம் அடுத்த 2 வாரங்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சி, அரியலூரில் இருந்து தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். தொடர்ந்து, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி அவர் 2ஆம் கட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து, கரூரில் கடந்த 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சோக சம்பவம் பலரின் மனதை உலுக்கிய நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தவெக பரப்புரை கூட்டம் அடுத்த 2 வாரங்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்தியில், ’நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.