சிறுத்தையை பிடிக்கும் காணொளி புதியதலைமுறை
டிரெண்டிங்

தும்கூர் இளைஞரின் துணிச்சலால் சிறுத்தை பிடிப்பு: மக்கள் பாராட்டுகள்

தும்கூர் மாநிலத்தில் சிறுத்தையின் வாலைப்பிடித்து இழுத்து அதை சிறைப்பிடித்த இளைஞருக்கு குவியும் பாராட்டுகள்

Jayashree A

காட்டு விலங்குகள் உணவினைத்தேடி அடிக்கடி ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருவது அதிகரித்து வரும் நிலையில், கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுத்தை ஒன்று ஊருக்கும் புகுந்து அங்கிருந்த மக்களை அச்சுறுத்தி வந்தது. அதை இளைஞர் ஒருவர் மிகவும் தைரியத்துடன் அதன் வாலைப்பிடித்து சிறைப்பிடித்த சம்பவமானது வைரலாகி வருகிறது.

இதற்கு முன் இதே பகுதியில் கடந்த நவம்பர் மாதத்தில் 52 வயதான கரியம்மா என்ற பெண் ஒருவரை சிறுத்தை அடித்துக்கொன்று அவரை காட்டுக்குள் இழுத்து சென்றுள்ளது. நீண்ட தேடுதலுக்குப்பிறகு கரியம்மாவின் சிதைந்த உடலை போலிசார் மீட்டனர். அதன் பிறகு 7 வயது ஆண் மற்றும் 9 வயது பெண் சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு மக்கள் நிம்மதியாக இருந்த நிலையில், மீண்டும் சிறுத்தையின் நடமட்டம் இருந்ததைக்கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். அச்சிறுத்தையை பொறிவைத்து, பிடிக்க, முயற்சித்து வந்தனர். ஆனால் சிறுத்தை போக்கு காட்டியது. இந்நிலையில் வனத்துறையினர் கிராமமக்களுடன் இணைந்து சிறுத்தையை பிடிக்க முயற்சியில் இறங்கினர்.

சம்பவதினத்தன்று, கேமராக்களின் உதவியோடு சிறுத்தையின் இருப்பிடத்தைக்கண்டுக் கொண்ட வனத்துறையினர் அதை பிடிப்பதற்கு கையில் வலையுடன் காத்திருந்த போது, சிறுத்தை பிடிபடாமல் போக்கு காட்டியது. இதனை கவனித்த கிராமவாசி ஆனந்த் என்பவர், மிகவும் தைரியத்துடன் பதுங்கி இருந்த சிறுத்தையின் வாலைப்பிடித்து இழுத்தார். சிறுத்தை அவரிடமிருந்து தப்பித்து ஓட நினைத்த சமயம் வனத்துறையினர் அதன் மீது வலை வீசி பிடித்து அதை கயிற்றால் கட்டி அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

கிராமவாசி ஆனந்தின் இச்செயலை கிராமமக்கள் பாராட்டி வருவதுடன் அவர் சிறுத்தையைப்பிடித்த துணிகரசம்பவத்தின் காணொளி வைரலாகி வருகிறது.