வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளை மிரட்டியதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு புதிய தலைமுறையின் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் தினகரன் விளக்கமளித்துள்ளார்.
புதிய தலைமுறையின் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், “தங்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்துகின்றீர்கள். அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறோம் என்று தினகரன் கூறியிருந்தால் பரவாயில்லை. ஆனால் தங்கள் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் 20 ஆண்டுகள் மட்டுமே சிறையில் அடைக்க முடியும். தூக்கில் போட முடியாது. சிறை தண்டனைக்கு பின்னர் மீண்டும் வெளியே வந்து பழிவாங்குவேன் என்று தினகரன் கூறியிருப்பது அகங்காரத்தின் உச்சகட்டம் மற்றும் அதிகாரிகளை மிரட்டுவது போல் உள்ளது” என குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு அக்னிப்பரீட்சை நிகழ்ச்சி மூலமாகவே பதிலளித்துள்ள டிடிவி தினகரன், “எங்களை அழித்துவிட்டு ஒரு இயக்கம் வளர வேண்டும் என்று நினைத்தால், அதற்கு நாங்கள் இடம் கொடுக்கமாட்டோம். உங்களிடம் அதிகாரம் உள்ளது என்பதற்காக அதிகபட்சமாக என்னை 25 வருடம் பிடித்து சிறையில் வைப்பீர்களா? பின்னர் வெளியே வந்தால் எனக்கு 75 வயதாகி இருக்கும். அப்போது எங்கள் இயக்கத்தை அழித்தவர்களை நான் விடமாட்டேன். அவர்கள் இயக்கத்தை வளரவிடாமல் செய்வேன் என்று தான், நான் ஊடங்களிடம் பேட்டியளித்தேன். நான் அந்தப் பேட்டியை இரவு 11.30 மணியளவில் அளித்தேன். அப்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் தூக்கத்தில் இருந்தாரா அல்லது வேறு ஏதும் கலக்கத்தில் இருந்தாரா என்று தெரியவில்லை.” என்று கூறினார்.