டிரெண்டிங்

வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியில்லை - டிடிவி தினகரன் 

webteam

வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தல், நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. வேலூர் மக்களவை தொகுதியை தவிர்த்து நடந்த இந்த தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 303 இடங்களை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறை பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்.

தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. அந்த கூட்டணி, தேனி மக்களவை தொகுதியை மட்டுமே கைப்பற்றியது. மீதமுள்ள 37 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது.

தேர்தல் விதிமுறைகளை மீறி பணப்பட்டுவாடா அதிகமாக நடந்ததாகக் கூறி வேலூர் மக்களவை தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருந்தது. இந்த தேர்தலில் திமுக சார்பில், அந்தக் கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தனர். 

இந்நிலையில், ரத்து செய்யப்பட்டிருந்த வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. வரும் 11 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதையடுத்து அந்த தொகுதியில் அதிமுக சார்பில்  புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என்று அதிமுக அறிவித்துள்ளது. அதேபோல் திமுக சார்பில் கதிர் ஆனந்த்தும் நாம்தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் போட்டியிடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் பேசுகையில், “அமமுகவுக்கு நிலையான சின்னம் இன்னும் கிடைக்கவில்லை. நிலையான சின்னம் கிடைத்தால் தான் தேர்தல்களில் போட்டியிட திட்டம் தீட்டியுள்ளோம். அமமுகவை கட்சியாக பதிவு செய்யும் இன்னும் நிறைவடையவில்லை. வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை” எனத் தெரிவித்தார்.