பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தொடர்பான உண்மைகளை, தேர்தல் முடிவுகளுக்குப்பின் வெளியிட இருப்பதாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச படமெடுத்த விவகாரம், தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணையை சிபிசிஐடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் பொள்ளாச்சியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதனிடையே, இச்சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் நாள்தோறும் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமமுக வேட்பாளர் சாமிநாதனை ஆதரித்து மக்களிடையே உரையாற்றிய டிடிவி தினகரன், பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் குற்றவாளிகளை தப்ப வைக்கும் நோக்கிலேயே சிபிசிஐடி விசாரணை நடத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பொள்ளாச்சி சம்பவத்தில் என்ன நடந்தது ? யார் பின்னணியில் உள்ளனர் என்ற உண்மையை மே 23-க்கு பிறகு ஆதாரத்துடன் வாட்ஸ் ஆப்பில் வெளியிடுவேன் என டிடிவி தினகரன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்த கல்லா பெட்டிகளை ஒழித்திட தான், பரிசு பெட்டியை சுப்ரிம் கோர்ட் கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.