டிரெண்டிங்

திருவாரூரில் அமமுக சார்பில் எஸ்.காமராஜ் போட்டி

திருவாரூரில் அமமுக சார்பில் எஸ்.காமராஜ் போட்டி

webteam

திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக சார்பில் எஸ்.காமராஜ் போட்டி என டிடிவி தினகரன் அறிவிப்பு 

காலியாக உள்ள திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. ஜனவரி 10 ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11 ஆம் தேதி முதல் வேட்பு மனுவைத் திரும்ப பெறலாம் எனவும் மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஜனவரி 14 ஆம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவும், வாக்கு எண்ணிக்கை ஜனவரி 31 ஆம் தேதியும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக சார்பில் எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி வரும் 8ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் காமராஜ். இவர் 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டவர்.

வேட்பாளர் அறிவிப்புக்கு பின் பேசிய டிடிவி தினகரன், ''இடைத்தேர்தல் தொடர்பாக எந்தக்கட்சியுடனும் கூட்டணி குறித்து பேசவில்லை. நாடாளுமன்றத்தேர்தலுக்கு ஒரு சில கட்சிகளோடு கூட்டணி பேசி வருகிறோம். பணம், பொருள் கொடுப்பதால் மக்களை விலைக்கு வாங்கிவிட முடியாது'' என்று தெரிவித்தார்

திருவாரூர் சட்டப் பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் அமீது போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஏற்கெனவே அறிவித்துள்ளது.